×

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்த உத்தரவு ரத்து; நில நிர்வாக ஆணையர் மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:  செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் நடிகர் மம்முட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு எனும் காப்புக்காடு நிலமாக மறுவகைப்படுத்தி கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அந்த மனுவில், 2007ம் ஆண்டு தனியார் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தை  கழுவேலி புறம்போக்காக மறுவகைபடுத்தபட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நிலம் தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நிலத்தை மறுவகைப்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நடிகர் மம்முட்டி தரப்பில் வாதிடப்பட்டது.  இதையேற்ற நீதிபதி, அந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக மறுவகைப்படுத்தி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.அதேசமயம், இந்த விவகாரத்தை மீண்டும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மம்முட்டி தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு 12 வாரங்களில் தகுந்த உத்தரவை நில நிர்வாக ஆணையர் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

Tags : Mammootty ,Kaluveli ,Chennai High Court ,Commissioner of Land ,Administration , Cancellation of order declaring land belonging to actor Mammootty as Kaluveli outlying land; Chennai High Court instructed Commissioner of Land Administration to re-investigate
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...